பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இரண்டு வார 'உழவர் திருவிழா கொண்டாட்டம்' எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், விவசாயக் கடன் முகாம்கள், கால்நடை சுகாதார முகாம்கள், கிராமங்களில் உழவர் கூட்டங்கள், விவசாயிகளுக்கு ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு கடன் நிவாரண திட்டமும் (ஒன் டைம் செட்டில்மென்ட் திட்டம்) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயிகள் தங்களின் கடனில் குறிப்பிட்ட தொகையையோ அல்லது அசலையோ மட்டும் திரும்பச் செலுத்திவிட்டு புதிய கடன்களைப் பெற்றுக்கொள்ளலாம். கடந்த ஆண்டு இதேபோன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 25 லட்சம் விவசாயிகள் பலனடைந்ததாகவும் இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் 50 லட்சம் விவசாயிகள் வரை பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில், “சென்னை மண்டலத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு 396 கிளைகள் உள்ளன. இவற்றில் 52 கிராமப்புற கிளைகள், 137 நகர கிளைகள் உள்ளன. இவை விவசாயிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. இந்த இரண்டு வார நிகழ்ச்சியில் விவசாய பயிர்க்கடன், நீர் பாசனக் கடன் தவிர விவசாயிகளுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன கடன், டிராக்டர் கடன், விவசாயக் கருவிகளுக்கான கடன், சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்கான கடன், கறவை மாடுகள் பண்ணை நிறுவுவதற்கான கடன், கோழி, மீன், பன்றி இறைச்சிக்கான கடன் உள்ளிட்ட இதர கடன்களும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவைகள் அறிந்து அதற்கேற்ப சேவைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். விவசாயிகளின் வேலை நேரத்தைக் கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் வங்கி அலுவலர்கள் செயல்படுவர். இந்த ஆண்டு பருவ மழை இயல்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் சிறந்த முறையில் அமையும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: 'கடனை திரும்பிச் செலுத்தாத 9,630 பேர் மீது குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும்'