கடந்த 2014-2019 இல் அதிமுக மக்களவை உறுப்பினராக இருந்த கே.என்.ராமச்சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். அந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமச்சந்திரன் விண்ணப்பித்துள்ளார். அப்போது, விண்ணப்பத்தைப் பரிசீலிக்க, தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் அமெரிக்கா சென்று வர விமான கட்டணம் 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை பெற்ற மேலாளர் தியாகராஜன், 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரி தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ராமச்சந்திரன் ஆகியோர் மீது 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரித்தார்.
அனைத்து தரப்பு விசாரணைக்குப் பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி லிங்கேஸ்வரன் இன்று வழங்கினார். அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து, வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள், 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராமசந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதம், ராஜசேகரனுக்கு 7 ஆண்டுகள் சிறையும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும், அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:தேர்தல் வழக்கு: ஆஜரான ப. சிதம்பரத்திடம் கிடுக்குப்பிடி கேள்விகள்