சென்னை: சாலிகிராமம் காந்தி நகரைச்சேர்ந்தவர், தென்னரசு. இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் சாலிகிராமத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில் தென்னரசு, ஐசிஐசிஐ வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கியிருப்பது போலவும், அதன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்றிருப்பது போலவும், மேலும் அதைச்செலுத்த வேண்டும் எனவும் தகவல் இருந்துள்ளது. ஆனால், தென்னரசுவிடம் கிரெடிட் கார்டே இல்லை என்பதுதான் திருப்புமுனை.
இதனையடுத்து வங்கிக்குச் சென்று முறையிட்ட தென்னரசு, விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் துறையினர், சைபர் கிரைம் காவல் துறையினரின் உதவியுடன் விசாரணை நடத்தத்தொடங்கினர்.
அப்போது கிரெடிட் கார்டு பெற்ற கணக்குக்கு கொடுக்கப்பட்டிருந்த மற்றொரு செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியைத் தேடத் தொடங்கினர். இதன் அடிப்படையில் சைதாப்பேட்டை விஜிபி சாலையைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்ற நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அபூபக்கர் சித்திக், கே.கே. நகர் எஸ்பிஐ வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார் எனத்தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வேலைக்கு முன்னதாக சாலிகிராமத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் பணியாற்றி வந்துள்ளார், அபூபக்கர்.
இந்த நேரத்தில் தனக்கு கிடைத்த சிம்கார்டு ஒன்றை வைத்து, ஐசிஐசிஐ வங்கிக்கிளையில் கணக்கு வைத்திருந்த தென்னரசுவின் ஆவணங்களை திருடிய அபூபக்கர், அவரது பெயரில் கிரெடிட் கார்டை பெற்றுள்ளார். பின்னர் அதன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் வங்கியில் கடன்பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இதேபோல் மேலும் சில வங்கி வாடிக்கையாளர்களின் பெயரிலும் அபூபக்கர் கிரெடிட் கார்டை பெற்று பண மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அபூபக்கர் சித்திக் மீது பண மோசடி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல் துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் வழக்கில் புதுச்சேரி பெண்ணை தேடும் சென்னை போலீஸ்