சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச்சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. 12 இடங்களில் கன மழைப் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 14 செ.மீ.மழையும், சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தலா 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
நேற்று தமிழ்நாடு பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்குச்சுழற்சி, மேற்கு திசையில் நகர்ந்து தற்போது கேரளப்பகுதிகளில் நிலவுகிறது. தற்பொழுது கிழக்கு திசை காற்றும், மேற்குத்திசை காற்றும் சந்திக்கும் ஈஸ்ட், வெஸ்ட் ஃபிகர் சூன் தெற்கு அந்தமான் கடல் முதல் தெற்கு அரபிக்கடல் வரை கிழக்கு, மேற்காக நிலவுகிறது. அடுத்து வரும் 3 தினங்களைப்பொறுத்தவரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும்.
கனமழையினைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நவம்பர் 9ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இது 10,11ஆம் தேதிகளில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் நகர்வு மற்றும் வலிமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மீனவர்கள் வரும் 8, 9ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் செல்ல வேண்டாம். வடகிழக்குப்பருவமழையைப்பொறுத்தவரை கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 210 மி.மீ இந்த காலகட்டத்தில் இயல்பளவு 202 மி.மீ.
இது இயல்பை விட 4 விழுக்காடு அதிகம். சென்னையைப் பொறுத்தவரை பதிவான மழை அளவு 413 மி.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 325 மி.மீ; இது இயல்பை விட 27 விழுக்காடு அதிகம்" எனக்கூறினார்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!