சென்னை அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் கடந்த 21ஆம் தேதி காவல் துறையினர் பிரபல ரவுடி சங்கரை பிடிக்க முயன்றபோது, காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால், ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி சங்கர் மீது கஞ்சா கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ரவுடி சங்கர் வெட்டியதில் படுகாயமடைந்த காவலர் முபாரக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார். இந்நிலையில், ரவுடியால் தாக்கப்பட்ட காவலர் முபாரக், தலைமை காவலர்கள் ஜெயபிரகாஷ், வடிவேலு, காவலர் காமேஷ்பாபு ஆகிய நான்கு பேரையும் பணியிடமாற்றம் செய்து கீழ்பாக்கம் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ரவுடியை துப்பாக்கியால் சுட்ட காவல் ஆய்வாளர் நடராஜன் அதே காவல் நிலையத்தில் பணியை தொடரும் நிலையில், உடனிருந்த காவலர்கள் மாற்றப்பட்டது ஏன் என்ற சர்ச்சை எழுந்தது. இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட முபாரக் உள்பட நான்கு காவலர்களுக்கும், ரவுடி சங்கரின் ஆதரவாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைத் தவிர்க்க தற்காலிகமாகப் பணியிடமாற்றம் செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுயநினைவு திரும்பிய பாடகர் எஸ்பிபி