சென்னை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் சென்னையில் வசிக்கும் திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் காவல் அலுவலர்கள் திருநங்கைகளை கண்ணியமான முறையில் கையாண்டு உறுதுணையாக செயல்படவும் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் சென்னை பெருநகரில் வசிக்கும் திருநங்கைகளை பாலியல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நல்வழிப்படுத்தி நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்யவும், சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் வாழவும் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வரும் திருநங்கைகளுக்கு அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அவர்களும் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து சாதனைகள் படைத்து வருவதை மனதில் கொண்டு வழிகாட்டுதல் வேண்டும் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய திருநங்கைகளுக்கு முடிந்த உதவிகள் செய்ய முன்வரவேண்டும் எனவும் காவல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
சென்னை பெருநகரக் காவல் துறையினர் திருநங்கைகளுக்கு சுய தொழிலில் ஈடுபட பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் லோகநாதன் கலந்துகொண்டு அறிவுரைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: ’மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’