சென்னை: இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் ட்ரக் ஓட்டுநர்கள், கிளீனர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு மது அருந்துவதன் தீமை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதனை தொழில்முறை நாடக கலைஞர்கள் அரங்கேற்றினர்.
குறிப்பாக, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதால் உண்டாகும் தீமை, குடும்பத்தினருக்கு ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்பு ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மேலும், பாதுகாப்பாக வண்டி ஓட்டும் வழிமுறைகள், சாலை பாதுகாப்பு விதிகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில், பறை இசை, ஒயிலாட்டம், கரகம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்டவை நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியை, இந்தியன் ஆயில் பொது மேலாளர் விஜயகுமார் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "குடித்து விட்டு வண்டி ஓட்டுவதன் விளைவாக சுமார் 3,000 நபர்கள் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்று தேசிய குற்றவியல் பதிவேடு அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது. எனவே, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல் ஆரோக்கியமான நல வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விலங்குகள் கொன்று புதைப்பு - அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு