திருவள்ளூர்: ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள், ராகவன் - குப்பம்மாள் தம்பதி. இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அதேநேரம் இந்த 4 பிள்ளைகளும் திருமணம் முடிக்காமல் இருந்தனர். இதனிடையே பெற்றோர் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதனால் குடும்பத்தில் கடைசி மகளான சுந்தரி பாய் மற்றும் அவரது அக்கா ஜானகி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகியும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவ்வாறு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உயிரிழந்த அதிர்ச்சியில், கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சுந்தரி பாயும் உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் இறப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், “எனது வீடு, 54 சவரன் நகை, வங்கி மற்றும் தபால் நிலையங்களில் 61 லட்சம் ரூபாய் பணம் ஆகிய அனைத்தையும் காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்திற்கு கொடுத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது எதிர் வீடு மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்து விடுங்கள். அதேபோல் எனது வீட்டில் வளர்த்து வந்த 10க்கும் மேற்பட்ட பூனைகளை பத்திரமாக பாதுகாக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆவடி காவல் உதவி ஆய்வாளர் பிரேமா மற்றும் ஆவடி விலிஞ்சியம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி அல்போன்சா ஆகியோரது தலைமையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சுந்தரி பாய் வசித்து வந்த வீட்டையும் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
பின்னர் இன்று (மார்ச் 18) சுந்தரி பாயின் சொத்துக்கள் உடைய ஆவணங்கள், 54 சவரன் தங்க நகைகள், 5,000 ரூபாய் ரொக்கப் பணம், வங்கி கணக்கு மற்றும் தபால் நிலைய கணக்கில் 60 லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்த ஆவணம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் ஆவடி காவல் நிலையத்தில் வைத்து ஆவடி துணை வட்டாட்சியர் செந்தில் முருகேசன், வருவாய்த்துறை அதிகாரி மோகனப்பிரியா ஆகியோரிடம் கிராம நிர்வாக அதிகாரிகள் அல்போன்சா முன்னிலையில் உதவி ஆய்வாளர் பிரேமா ஒப்படைத்தார்.
பின்னர் ஆவடி துணை வட்டாட்சியரால், ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்க்கப்பட்டு, அனைத்து பொருளுக்கும் சீல் வைத்து திருவள்ளூர் கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பீகாரில் கர்ப்பிணிச் சிறுமி எரித்துக் கொலை! - கோர சம்பவத்தின் கொடூர பின்னணி!