ஆவடி மாநகராட்சி உட்பட்ட சேக்காடு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்குச் சொந்தமான 50 சென்ட் நிலத்தை வீட்டுமனை அங்கீகாரம் பெறுவதற்காக ஆவடி மாநகராட்சியை அணுகியுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஆவடி மாநகராட்சி மாநகர அமைப்பு ஆய்வாளர் காமத்துரை, வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்க ஆறு லட்சம் ரூபாய் கையூட்டு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரமேஷ் லஞ்ச ஒழிப்பு அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்பு அலுவலர்களின் அறிவுறுத்தலின் படி, ஒரு லட்சம் ரூபாய் முன் பணம் தருவதாக கூறி ஆய்வாளர் காமத்துரையை ஹுந்து கல்லூரி அருகே ரமேஷ் வரவழைத்துள்ளார்.
அங்கு, கைரேகை பதியக்கூடிய ரசாயனத்தைத் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்.அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் காமத்துரையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்த லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள், வேறு எங்கெல்லாம் கையூட்டு வாங்கியுள்ளார் என்பது குறித்து காமத்துரையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது - தேங்காய் உடைத்துக் கொண்டாடிய மக்கள்!