சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆட்டோவில் லிப்ட் கொடுப்பதாகக் கூறி மூதாட்டிகளிடம் ஆசை வார்த்தையில் பேசி, ஆட்டோவில் ஏற்றுகின்றனர். பின்னர் அவர்களிடம் நகை அறுந்து இருப்பதாகக் கூறி நம்ப வைத்து, நகையை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக சிலர் வைத்துள்ளனர். இதே போன்ற புகார்கள் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து காவல் துறையினர் கொள்ளைக் கும்பலைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளைக் கும்பல் ஆந்திராவில் சித்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படைக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு குற்றவாளி அகிலாவைக் கைது செய்யவிடாமல், ’தீரன்’ பட பாணியில் கிராமமே போலீசாரைத் தடுத்துள்ளது. அதன்பின், அகிலாவை கைது செய்ய ஆந்திரா காவல் துறை உதவியை சென்னை தனிப்படை நாடியுள்ளது. பின்னர், அவர்களின் உதவியோடு, ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட அகிலா என்ற பெண்ணை கைது செய்தனர். இவரது கூட்டாளியான அலமேலு மற்றும் கனகா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் காவல்துறை அகிலாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன. அகிலா வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைவருமே இது போன்று கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் ஆட்டோவில் மூன்று குழுக்களாகப் பிரிந்து, மூதாட்டியை மட்டும் குறிவைத்து, கொள்ளையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் இதே போல் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தங்கள் மீது நான்கு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னைக்கு அழைத்து வந்து அகிலாவிடமிருந்து இரண்டு சவரன் நகைகள் மற்றும் ஆட்டோவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேவாலயத்தில் பாலியல் புகார் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு