சென்னை அடுத்த சேலையூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(38). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இரவு கோபாலகிருஷ்ணன் நேற்று (மே.9) இரவு உணவிற்கு பின்னர் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் கோபாலகிருஷ்ணனை தலை, கை, காலில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில், அவரது இரண்டு கை விரல்களும் துண்டாகி, தலை, கால்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை உறவினர்கள் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.
இந்நிலையில், நேற்று (மே.9) இரவு 2 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைகழித்து வருவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து கோபாலகிருஷ்ணனின் தாய் சரோஜா கூறுகையில், "தனது மகனுக்கு எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லை. வெட்டியது யார் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. நேற்று (மே. 9) நள்ளிரவு முதலே தனது மகன் வலியால் துடித்து வருகிறார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர் இல்லை எனக்கூறி இதுவரை அலைக்கழித்து வருகின்றனர்"என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது குறித்து தகவலறிந்த சேலையூர் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரியாக வெட்டு: 3 பேர் தப்பி ஓட்டம்