அகில இந்திய சிட்பண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மெட்ராஸ் மேலாண்மை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது, " முதலாளித்துவமும், பொதுவுடைமையும் இந்தியாவை ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் அணுகின.
நமது பாரம்பரிய பழக்கவழக்கங்களை கைவிட்டால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்று பல ஆண்டுகளாக கூறி வந்தன. ஆனால், 2005ஆம் ஆண்டு ஒரே மாதிரியான அணுகுமுறை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது என் ஜி-20 நாடுகள் கருத்து தெரிவித்தன.
அதேபோல் 2008ஆம் ஆண்டு உலக வங்கியும் இதே கருத்தை தெரிவித்தது. இது மோடி அரசு வந்த பிறகு தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியாவுடைய நிலப்பரப்பிற்கு ஏற்ப திட்டங்கள் வகுத்து கொள்கைகள் கொண்டுவர, நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு சமூக முதலீடு மிகவும் முக்கியமானது. அதாவது ஒரு சமூகம் தங்களுக்குள் உதவி பரஸ்பரம் போட்டியிட்டு, வளர்ச்சியடைய வேண்டும்.
இந்த நடைமுறையை பயன்படுத்தி தான் சில்லறை வணிகத்தில் நாடார் சமூக மக்கள் முன்னேறினர். அதேபோல திருப்பூர் பகுதியிலும் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளனர். திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 7பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பனியன் ஏற்றுமதி நடைபெறுகிறது. உலகமயமாக்கலுக்கு எதிர்காலம் இல்லை. நாட்டுப்பற்றுக்கே எதிர்காலம் உண்டு" என்றார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இந்தி என்றாலே தமிழ்நாட்டில் வேண்டாம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் 50 லட்சம் பேர் இந்திபடித்தவர்கள். ஆண்டுக்கு 7லட்சம் பேர் இந்தி தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர்.
எனவே, அரசியல்வாதிகள் இந்தி வேண்டாம் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும், இந்தி தமிழ்நாட்டிற்குள் வரத்தான் போகிறது.
இந்தி தெரிந்தவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு தான் அரசியல்வாதிகள் ஒப்பந்தம் போடுகிறார்கள். அவர்கள் மட்டும் ரகசியமாக இந்தி படித்துக்கொள்வார்கள். மக்களை மட்டும் படிக்கக் கூடாது என்பார்கள்.
பகவத்கீதையை பாடமாக்குவது அவசியமற்றது. ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அவர் அரசியலில் முழுவீச்சில் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம் " என்றார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டை கிரிஜா வைத்தியநாதனும், குருமூர்த்தியும்தான் ஆள்கின்றனர்..!' - சீமான் குற்றச்சாட்டு