சென்னை ஐஸ்அவுஸ் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பேபி (45). கணவனை இழந்த இவருக்கு பிரேம்குமார் மற்றும் கார்த்திக் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் கார்த்திக் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்று சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (செப்.4) காவல்துறையினர் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக கார்த்திக்கை அழைத்து சென்று, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்த மகனை மீண்டும் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப்பதாக குற்றம் சாட்டி, இவரது தாய் பேபி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதைக் கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். பின் இது குறித்து தகவலறிந்த வேப்பேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேபியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நான் நல்லதுக்காக போராடும் 'ஸ்லீப்பர் செல்' - துப்பாக்கியுடன் வந்த இளைஞரால் பரபரப்பு