கரோனா நோய்த்தொற்று நுரையீரலில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ள கரோனா நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சுகாதாரத்துறை சார்பில் ரெம்டெசிவிர் மருந்துகள் உரிய மருத்துவர் பரிந்துரையுடன் உள்ளவர்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று(மே11) ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்தவர்களில் 3 பேரின் பரிந்துரைச் சீட்டு ஒரேபோல் இருப்பதை அறிந்து, மருத்துவமனை ஊழியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்தப் பரிந்துரைச் சீட்டு, தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வம் என்பவருடையது எனவும்; அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்துவிட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து இறந்த ஒருவருக்கு வழங்கப்பட்ட பரிந்துரைச் சீட்டை வைத்து, கலர் ஜெராக்ஸ் எடுத்து மூன்று பேரும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாதவரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், சுரேஷ் குமார், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டி பால் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ரெம்டெசிவிர் மருந்து, அதன் தேவையை அடுத்து கள்ளச் சந்தை வியாபாரம் பெருகி வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்க முயன்ற இரு மருத்துவர்கள் உட்பட மொத்தம் 17 பேரை காவல் துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி’ - திருமாவளவன் குற்றச்சாட்டு