சென்னை: ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருபவர் மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த சுகந்தி (45). இவர், கடந்த 14ஆம் தேதி ராஜாஜி சாலை எரபாலு செட்டி தெருவிலுள்ள ஏடிஎம்-ற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அந்த இயந்திரத்திலிருந்து பணம் வராததால் அருகில் இருந்த இளைஞரை அழைத்து பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.
அந்த இளைஞர் சுகந்தியின் ஏடிஎம் கார்டில் இருந்த இருப்பு தொகையை பார்ப்பதுபோல பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு இயந்திரத்தில் பணமில்லை என கூறி சுகந்தியிடம் கார்டை கொடுத்துள்ளார். பின்னர், கடந்த 16ஆம் தேதி அவரது வங்கி கணக்கிலிருந்து 1 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
காவல் துறை விசாரணை
இதனைக் கண்டு அதிர்சியடைந்த அவர், தனது ஏடிஎம் கார்டை எடுத்து கொண்டு வங்கியில் காண்பித்துள்ளார். அப்போது, அந்த ஏடிஎம் கார்டு போலியானது என தெரியவந்தது. உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்வதற்குகுள் மீண்டும் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் 99 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதனைக் கண்டு திகைத்துப் போன சுகந்தி வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம் மையம், தனியார் நகைக்கடை ஆகியவற்றிலிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், வடமாநில நபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஏடிஎம் திருடன் கைது
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் சகானி (28) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், ஏடிஎம் மையங்களுக்கு செல்லும் முதியவர்களை மட்டுமே குறிவைத்து அவர்களுக்கு பணம் எடுக்க உதவுவது போல நடித்து அவர்களிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, அவர்களது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.
ஏற்கெனவே இதேபோல் நூதன முறை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தன் சகானியை திருவொற்றியூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியில் வந்த சகானி மீண்டும் அதே பாணியில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடமிருந்து 24 ஆயிரம் பணம், 10 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்க்கு வரும் அப்பாவிகளை ஏமாற்றி கொள்ளையடித்த பலே திருடன் கைது