இலங்கையில் நடந்த தாக்குதலையும், தமிழ்நாட்டில் நிகழ்ந்த சாதி கலவரத்தை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இலங்கையில் பன்னெடுங்காலமாக இஸ்லாமிய தமிழர்களையும், தமிழ் மக்களையும் பிரித்து வீழ்த்தி வெற்றி கண்ட சிங்கள இனவாத அரசு தற்போது நடைபெற்ற தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல் வந்த பிறகும், அதில் கவனம் செலுத்தி மக்களை பாதுகாக்க தவறிவிட்டது. அங்குள்ள சில தேவாலயங்களில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ,லத்தீன் என்று நான்கு மொழிகளில் பிரார்த்தனை நடைபெறுகிறது.
அதில் குறிப்பாக தமிழ் மொழி பிரார்த்தனை நேரத்தின் போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்றே தக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எங்கள் வழிபாட்டுத் தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது இஸ்லாமிய இளைஞர்களை வைத்து தேவாலயங்களில் தாக்குதல் நடத்துகின்றனர். தன்னாட்டு மக்களின் மீதே தக்குதல் நடத்திய ராஜபக்சே இந்த தாக்குதலின் போது அரசு மக்களை காப்பாற்ற தவறிவிட்டது என்று அனுதாபம் கூறுவது போல் நடிக்கிறார்.
நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நாங்கள் பார்க்கிறோம். இதில் வெறும் இஸ்லாமிய இளைஞர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கருத முடியாது. வல்லாதிக்க நாடுகளின் சம்பந்தம் இருப்பதை பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் நடந்த தாக்குதலுக்கு இது பதிலடி என்றால் அங்குதான் இந்த தாக்குதல் நடந்திருக்க வேண்டும். அப்பாவி தமிழர்கள் என்ன செய்தனர். எங்கள் மதம் சிறந்தது வழிபடுங்கள் எங்கள் மதமும் சிறந்தது வழி விடுங்கள் என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் கோட்பாடாக எடுக்க வேண்டும். அநீதியை கண்டு அச்சம் கொள்ளாமல் நிற்கிறானோ அவன் தான் உண்மையான ஜிஹாத் என்று நபிகள் நாயகம் கூறுகிறார். அநீதியே ஜிஹாத்தாக மாறிவிடாது. தன் உயிரை கொடுத்தாவது பிற உயிரை காப்பாற்றுபவன் தான் உண்மையான போராளி.
தன் உயிரை மாய்த்து 100 உயிரை கொள்பவன் அல்ல போராளி. இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த எம் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத சிங்கள் அரசை கண்டிக்கின்றோம்.
தமிழ் தேசிய ஒற்றுமை எழும்போதெல்லாம் சாதி, மத கலவரத்தை தூண்டிவிட்டு இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கலவரம் நடத்தி வருகின்றனர். தமிழின் விடுதலைக்கு தமிழ்தேசிய ஒற்றுமை ஒன்றே வழி என்று முழங்கிய தமிழரசன் பிறந்த பொன்பரப்பியிலே இது போன்ற கலவரம் நடத்தபட்டுள்ளது அவமானப்பட வேண்டிய ஒன்று. தமிழ் இளம் தலைமுறையினர் மிகுந்த விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.