சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களின் நலன் காத்திட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மருத்துவக் கல்லூரிப் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக விடுதியிலேயே முடக்கப்பட்டுள்ளனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் பயிற்சி மருத்துவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். கரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் ஏழு நாட்கள் பணி முடித்த உடன், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் விடுப்பு அளிக்க வேண்டும். மருத்துவர்கள் , மருத்துவப் பணியாளர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் தடுத்திட, தனி கண்காணிப்புக் குழுவை உருவாக்க வேண்டும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தேவை அதிகமுள்ள நிலையில், படித்து விட்டு அரசுப் பணிக்காக காத்திருக்கும், இளம் மருத்துவர்களையும், பணியாளர்களையும் உடனடியாக பணியில் நியமிக்க வேண்டும்.
தற்காலிக செவிலியர்கள் உட்பட ஒப்பந்த ஊழியர்கள், 108 ஆம்புலென்ஸ் ஊழியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். இவர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். இவர்கள் கரோனா பணியில் இறக்க நேரின், இவர்கள் குடும்பத்திற்கும், அரசு அறிவித்துள்ள ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு