சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடற்கூராய்வு அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதியான நிலையில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை காவல் துறையினர் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று, காலை மீண்டும் வழக்கம்போல் காவல் நிலையத்தில் ஹேம்நாத் ஆஜரானார். அவரிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
சித்ரா தற்கொலைக்கு காரணம் அவரது கணவரும், அவரது தாயாரும் தந்த அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். அன்று முதலே இருவருக்கும் சற்று மனக் கசப்பு ஏற்பட்டதாகவும், சித்ராவின் மீது ஹேம்நாத் சந்தேகம் கொண்டதன் காரணமாகவே ஹோட்டலில் சித்ராவுடன் அவர் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஹேம்நாத் குடித்து விட்டு தகராறு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹேம்நாத் குறித்து சக நடிகைகள், நண்பர்கள் கூறிய சில விஷயங்கள் காரணமாக, சித்ரா மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், ஹேம்நாத்தை விட்டு விடும்படி அவரது தாய் கூறியதாக கூறப்படுகிறது.
சித்ரா இறந்த பிறகு அவரிடமிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள், ஹேம் நாத்தின் செல்போனும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அவர்கள் எந்த மாதிரியான குறுந்தகவல்கள் பரிமாறி உள்ளார்கள் என்பது ஆய்வு செய்தனர். ஆனால், சில தகவல்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில் இன்று மதியம், அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் நேரடியாக காவல் நிலையத்தில் வந்து ஹேம்நாத்திடம் தனி அறையில் வைத்து தீவிரமாக விசாரணை செய்துள்ளார். ஆர்டிஓ விசாரணை தாமதமாவதால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் விசாரணையின்போது ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரனும் காவல் நிலையத்தில் இருந்ததாகவும் அவரிடமும் சித்ரா மரணம் குறித்து வாக்கு மூலம் வாங்கியதாக தெரிகிறது.
சித்ராவை கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். இவை அனைத்தும் ஆர்டிஓ விசாரணை முழுமை அடைந்த பிறகு இறுதிசெய்யப்படும் எனத் தெரிகிறது.
மேலும், நடிகை சித்ரா இறுதியாக நடித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் அதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்ட துணை ஆணையர் தீபா சத்தியன் அவர்களிடம் சித்ரா படப்பிடிப்பில் எந்த மனநிலையில் இருந்தார், ஏதேனும் கோபமாக இருந்தாரா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது என தகவல் தெரிவிக்கின்றனர். துணை ஆணையரின் வருகையால் விசாரணை சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.