சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட்.10) சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் பாமக சார்பில் ஜி. கே.மணி, வி.சி.க.சார்பில் சிந்தனைச் செல்வன், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அதிமுக பங்கேற்காமல் புறக்கணித்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சபாநாயகர் அப்பாவு சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”சென்னை கலைவாணர் அரங்கத்தில், 13ஆம் தேதி நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கணினி வசதி, டேப்லெட் வழங்கப்படுகிறது. இதற்காக தனியாக பயிற்சி வழங்கப்படுகிறது.

வேளாண்மைத் துறைக்கு என்று தனியாக நிதி நிலை அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை மானிய கோரிக்கை விவாதம் நடந்து அதற்கு அமைச்சர்கள் பதில் தருவார்கள்” என்றார்.
