சென்னை: அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தில், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்வதாக ஈபிஎஸ் தரப்பு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தது.
ஆனால் இதற்கு சபாநாயகர் அங்கீகாரம் வழங்காததால், நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஈபிஎஸ் தரப்பினர் புறக்கணித்து சபாநாயகர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு நாள் சட்டபேரவை நிகழ்விலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பினர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதியையும் மீறி ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள போராட்டம் நடத்தும் இடத்தில் கறுப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு காவல்துறையினரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், ஈபிஎஸ் உள்பட அவரது தரப்பினர் கைது செய்யப்பட்டு, சென்னை ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ், "முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை எதிர்க்கட்சி துணைச் செயலாளராகவும் அங்கீகரிக்க 62 எம்எல்ஏக்கள் ஒப்புதலோடு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் எம்எல்ஏக்கள் ஒப்புதல் கடிதம் அடங்கிய நகலையும் சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பினோம். இதனை சட்டப்பேரவை சபாநாயகர் மூன்று மாதம் கிடப்பில் போட்டுவிட்டு, எந்த ஒரு முடிவும் தெரிவிக்கவில்லை. அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தொடர்வார் என்ற அறிவிப்பை வெளியிட்டு எங்களுக்கு அநீதி இழைத்துள்ளார்.
இந்த அறிவிப்பு சட்டத்துக்கு புறம்பானது. சட்டப்பேரவை சபாநாயகரை தனியாக சந்தித்து அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டது. இருந்தபோதும் முதலமைச்சர் கூறியதை அப்படியே சபாநாயகர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். சபாநாயகர் நடுநிலைமையோடு செயல்படவில்லை.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் செயலாளர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் முடிவு செய்யப்படுவார்கள். சட்டமன்றத்தில் சட்டப்பேரவை தலைவர் மூலமாக, திமுக ஜனநாயக படுகொலை செய்துள்ளது. திமுகவின் 'பி' அணியாக ஓபிஎஸ் செயல்படுகிறார்" என கூறினார்.
இதையும் படிங்க: தடையை மீறி தர்ணா - ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது