சென்னை: சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த முகமது நசுருல்லா, புதுக்கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வருகிறார். மேலும் இவர் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்து வருகிறார். நேற்று கல்லூரியை முடித்து விட்டு முகமது நசுருல்லா தனது நண்பர்களுடன் சென்ற போது 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து முகமது நசுருல்லாவை தாக்கியுள்ளனர்.
அப்போது மாணவர்கள், தாக்கிய சிலரைப் பிடித்து கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தனர். அப்போது கல்லூரி முதல்வரையும் அந்த நபர்கள் மிரட்டியதால், உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர் முகமது நசுருல்லா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின் முகமது நசுருல்லா ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் போலீசார் பிடிபட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவர் தலைவர் போட்டியில் இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. முகமது நசுருல்லா கல்லூரி மாணவர் தலைவராக ஆனதை தாங்க முடியாமல், மற்றொரு முன்னாள் கல்லூரி மாணவரான சோயிப் முகமது மாணவர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு முகமது நசுருல்லாவை தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலின் போது பிடிபட்ட முன்னாள் மாணவர் சோயிப் முகமது, முபாரக் செரீப், பாலகணேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் மோதல் சம்பவம் பதிவாகி உள்ள நிலையில் போலீசார் அதனை அடிப்படையாக வைத்து தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் சோயிப் முகமது திமுக 115வது வட்ட முன்னாள் செயலாளர் ரகுமான் செரீப் என்பவரின் மகன் என்பதாலும், அவர் மீது மூன்று வழக்குகள் சென்னை காவல் துறையில் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி புதுக்கல்லூரி மாணவர் தலைவர் தேர்தலில் தலையிட்டு பிரச்னை செய்ததும் தெரியவந்துள்ளது.