சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது.
ஆணையம் சார்பாக 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு செய்த 7 பேரிடமும் ஆணையம் விசாரணையை நடத்தியது. இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் முதல் ஐபிஎஸ் அலுவலர்கள் வரை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பெற்றது.
இந்தச்சூழலில் தான் 90 விழுக்காடு பணிகள் ஆணையத்தின் விசாரணையில் நிறைவடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக மொழியாக்கம் செய்து பதிவு செய்வதாகக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால், ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச்சென்ற அப்போலோ மருத்துவமனை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது. இதன் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் ஆணையம் முடங்கியது. பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைத்து ஆணையம் தனது விசாரணை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேரை உள்ளடக்கிய எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. பின்னர் இறுதியாக ஆணையம் அமைக்க காரணமான ஓ.பன்னீர்செல்வம் ஆணைத்தில் தனது வாக்கு மூலங்களைக்கொடுத்தார். பல மருத்துவர்களிடமும் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது.
இதன்பின்பு நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தினார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு, தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை(ஆகஸ்ட் 22) காலை முதலமைச்சர் அலுவலகத்தில் ஆணையம் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க நேரம் கேட்கப்பட்டது. அப்போது, முதலமைச்சரின் பணிகள் காரணமாக நேரம் ஒதுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. இந்நிலையில், அவரைச் சந்திக்க நாளை காலை 10.30 மணிக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமிக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 500 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் கொடுக்கவுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதி அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவக்குழு மருத்துவ சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்று அறிக்கை அளித்திருப்பதால், ஆறுமுகசாமி எவ்வாறான அறிக்கையை அரசுக்கு கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்திய வம்சாவளி பெண்கள் மீது நிறவெறி தாக்குதல்... அமெரிக்க பெண்மணி கைது