சென்னை: அண்ணாநகர் அடுத்த நொளம்பூர் பகுதியில் ஏ.ஆர்.டி ஜுவல்லரி என்கிற பெயரில் நகைக்கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த நகைக்கடையில் ஆல்பின், ராபீன் என்கிற சகோதரர்கள் உரிமையாளராக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் ஆருத்ரா, ஐஎஃப்எஸ் மோசடி நிறுவனங்களைப் போல ஏ.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனமும் தங்க நகை சேமிப்பு, தங்க நகை கடன், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் வாரம் ரூ.3000 வீதம் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிவித்து இருந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஏ.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரியில் முதலீடு செய்த பொதுமக்கள் அந்நிறுவனம் மோசடி செய்ததாக காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தனர். அதன் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏ.ஆர்.டி ஜூவல்லரியின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் மற்றும் முகவர்களாக செயல்பட்டவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னதாக கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அம்பத்தூர் கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அவரது உறவினர் உட்பட பல பேரிடம் மொத்தமாக ரூ.25 லட்சம் வசூல் செய்து ஏ.ஆர்.டி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். தற்போது பன்னீர்செல்வத்திடம் பணம் கொடுத்த அவரது உறவினர்கள் பன்னீர்செல்வத்தை தகாத வார்த்தையில் பேசி பணத்தை திருப்பி தருமாறு வற்புறுத்தி உள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பன்னீர்செல்வம் நேற்று ( நவ.30) தனது வீட்டில் உள்ள அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல்நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உறவினர்கள் பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "அடுத்த 20 ஆண்டுகளில் ஐபிஎல் ஊடக உரிமம் 50 பில்லியன் டாலரை எட்டும்" - ஐபிஎல் தலைவர் அருண் துமால்!