சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத்திறன்களை வெளிகொண்டு வரும் வகையில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ’மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு உதவிபெறும் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முதல்முறையாக 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளை வாரத்தில் இரண்டு பாட வேளைகள் கற்பிக்க வேண்டும்.
இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புறக் கலை ஆகிய ஐந்து கலைச்செயல்பாடுகளில் விரும்பிய ஏதேனும் கலை வடிவத்தை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதற்காக அருகில் உள்ள இசை, நடனம் சார்ந்த கலைஞர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசுப்பள்ளி அளவில் இதனை செயல்படுத்த அப்பள்ளியைச்சேர்ந்த ஆசிரியர் ஒருவரை பொறுப்பாக நியமிக்க வேண்டும்.
தமிழ் இசை, உடுக்கை, பறை, ஒயில் ஆட்டம், கரகாட்டம், கும்மி, மயிலாட்டம், தேவராட்டம், பரதநாட்டியம், பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து, தெருக்கூத்து, புகைப்படம் எடுத்தல், வரைதல், ஓவியம், களிமண்வேலை உள்ளிட்ட பிற கலைகள், இதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களை மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் பங்கேற்கச் செய்து அதில் வெற்றிபெறுவோர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்