சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் வசித்து வரும் 35 வயது பெண்ணுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து வரன் பார்க்கும் தனியார் ஆன்லைன் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இவரது ப்ரொஃபைலை பார்த்து ஜூன் மாதம் ஒரு நபர் தொடர்பு கொண்டு தனது பெயர் ஹபீப் ரஹ்மான் (38) என்றும், எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி தனது மனைவி இறந்து விட்டதாக கூறினார்.
மேலும் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வசித்து வருவதாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரன் பார்க்கும்போது உங்களது ப்ரொபைல் பார்த்து தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்ளார்.
திருமணத்தைப் பற்றி பேச நேரில் வருமாறு அந்த பெண் கூறவே இவர் விலை உயர்ந்த சொகுசு காரில் பந்தாவாக சென்று பேசியுள்ளார். அப்போது தனக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு அண்ணன் இருப்பதாகவும் அண்ணன் கனடாவிலும் அக்கா பூருனேவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அழகான பேச்சு, அமைதியான குணம், நல்ல மனிதர் போல இருக்கின்றார் என்று நினைத்து அந்தப் பெண்ணுக்கு பிடித்துப் போகவே அந்த பெண் திருமணத்தை குறித்து பேசினார். அப்போது அக்கா ஜூலை மாதம் சென்னைக்கு வருவதால் அவர்கள் வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் மூன்று நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் அவசரமாக 60 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனவும், இரண்டு நாட்களில் தந்து விடுவதாக கூறியதும் உடனே அந்த பெண் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார்.
பின்னர் ஐந்து நாட்கள் கழித்து தனக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பதாகவும் அந்த இடம் குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த வழக்கை முடிக்க 10 லட்சம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அந்த பெண்ணும் வருங்கால கணவர் என்று நம்பி 10 லட்சம் பணத்தை நேரில் அழைத்து கொடுத்துள்ளார்.
பின்னர் பழகிய 30 நாட்களில் சிறுக சிறுக 36 லட்சம் ரூபாய் மற்றும் 13 சவரன் தங்க நகையை வாங்கிக்கொண்டு ஹபீப் ரஹ்மான் சென்றுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜில் பணம் கொடுத்ததற்கு நன்றி பணத்தை திருப்பித் தருவதாக கூறிவிட்டு செல்லை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
பின்னர் மூன்று மாதமாக பல இடங்களில் ஹபீப் ரஹ்மானை தேடி அவர் கிடைக்காததால் தாம்பரம் உதவி கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, அவரிடம் சென்று ஹபீப் ரஹ்மான் என்ற நபர் தன்னை ஏமாற்றி பணம் மற்றும் நகை வாங்கிக் கொண்டு சென்றதாக கூறி புகார் அளித்துள்ளார்.
உடனே ஹபீப் ரஹ்மானை பிடிக்க ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் அவரது மனைவியுடன் இருப்பது தெரியவந்தது. போலீசார் உடனடியாக சென்று ஹபீப் ரஹ்மானை கைது செய்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருப்பதால் ஹபீப் ரஹ்மானை பீர்க்கன்காரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் போலீஸ் விசாரணையில் அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணம் ஆகி மனைவிகளுடன் வசித்து வருவதாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவன் இழந்தவர்களை இணையதளம் மூலமாக பணம் கட்டி அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
நூதன முறையில் பணம், நகை வாங்கி விலை உயர்ந்த கார், 50 ஆயிரத்தில் வாட்ச், விலை உயர்ந்த துணிமணிகள், அதுமட்டுமின்றி உல்லாச வாழ்க்கை வாழ மாதத்தில் 10 நாட்களுக்கு கோவா, மற்றும் மசாஜ் செய்து கொள்ள கேரளா என உல்லாசமாக வாழ்ந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச், கார் இரண்டு சவரன் தங்க நகை மட்டுமே பறிமுதல் செய்தனர்.
பின்னர் ஹபீப் ரஹ்மானிடம் 36 லட்சம் பணத்தைக் குறித்து கேட்டபோது அவர் கூலாக செலவு பண்ணிட்டேன் சார் என்று கூறி சிரித்துள்ளார். போலீசார் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தினமும் 20 மணிநேரம் வேலை - துபாய்க்கு வேலைக்குச்சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை