சென்னை: பெரம்பூர் பிரகாசம் தெருவைச் சேர்ந்தவர் சைமன் சின்னிசந்திரன் (42). இவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல், பெரியமேடு ஈவிஆர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மதபோதகர் என்று கூறி அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (அக் 24) இரவு திடீரென விடுதியின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சைமனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரியமேடு காவல்துறையினர், சைமன் தங்கியிருந்த விடுதி அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு சைமன் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தில் , “நான் (சைமன்) 18 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து விட்டேன்.
![தற்கொலையை தவிர்த்திடுக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16738790_suicidee.jpg)
இதுவரை எனக்கு பண உதவி செய்த அனைவருக்கும் நன்றி. எனது இறப்பு குறித்து வழக்கறிஞர் கௌதமனுக்கு தகவல் தெரிவியுங்கள்” என எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து சைமன் குறிப்பிட்டிருந்த கெளதமனை வரவழைத்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சைமன் கடந்த 2020ஆம் ஆண்டு வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார் என்பதும், பின்னர் ஜாமீனில் வெளியே எடுக்க ஆட்கள் யாரும் இல்லாததால், வழக்கறிஞர் கௌதமன் பணம் செலவழித்து வெளியே எடுத்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் செங்குன்றம் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சைமன் வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை "அந்த வார்த்தையை" சொல்லி அழைத்த இளைஞருக்கு 18 மாதங்கள் சிறை