கரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக தேர்வு எழுதமலேயே முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இன்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனைதொடர்ந்து, தேர்வு வைக்கக் கூடிய சூழல் இல்லாததால் அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், பல்கலைக்கழக அரியர் தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ததை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.8) விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மாணிய குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்றும் அரியர் மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவித்தால் பல்கலைக்கழகத்தின் கல்வி தரம் பாதிக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, யூஜிசி விதிகளுக்கு முரணாக இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு அரசு முடிவெடுக்கலாம் என பதிலளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு, ஏஐசிடிஇ, யுஜிசி ஆகியவை இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.