நீலகிரி: தமிழகத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம், சென்னை - கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைத்து நாளை மாலை விமானம் மூலம் மைசூர் செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து, 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கு வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்கிறார். மேலும், அதனைத் தொடர்ந்து 9:35 மணிக்கு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்குப் பிரதமர் மோடி வருகை தருகிறார். அங்கு ஆஸ்கார் விருது வென்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் தோன்றிய ரகு, பொம்மி என்ற இரு யானைகளை பார்வையிடுகிறார்.
மேலும், அப்படத்தில் நடத்த பெம்மன்- பெள்ளி தம்பதியை சந்தித்து கௌரவப்படுத்தவும் உள்ளார். பின்னர், தேசிய புலிகள் காப்பகத்தில் சிறப்பாக பணியாற்றிய கள இயக்குநர்களுக்கு சான்றிதழ் வழங்கவும் உள்ளார். மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மூத்த மூன்று யானை பாகன்களை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து, யானைகளுக்கு வழங்கப்படும் உணவை பார்வையிட்டு, இரண்டு யானைகளுக்கும் உணவளிக்க உள்ளார்.
மேலும் அதனைத் தொடர்ந்து, T-23 புலியைப் பிடித்ததில் திறமையாகச் செயல்பட்ட மூன்று வேட்டை தடுப்பு காவலர்களைச் சந்திக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்னர், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து மசினகுடிக்கு, சாலை மார்க்கமாக வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்கிறார்.
மைசூர் செல்லும் ராணுவ ஹெலிகாப்டரின் ஒத்திகை இன்று மசினகுடியில் நடைபெற்றது. மோடி வருகையை முன்னிட்டு விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் 5-அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்புப் பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: RTPCR டெஸ்ட் அதிகரிக்க கோரி ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்