சென்னை: தமிழ்நாடு செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதை வழங்கினார். இதனைத்தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தன் தாயுடன் பிரக்ஞானந்தா சந்தித்து, குடியரசுத் தலைவர் கையால் அர்ஜுனா விருது வாங்கியிருப்பதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரக்ஞானந்தா, “முதலமைச்சரை நேரில் சந்தித்து அர்ஜூனா விருது வாங்கியதை காண்பித்து வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பல நாடுகளுக்குச் சென்று விளையாடும் போது அங்குள்ள விளையாட்டு வீரர்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற்றதை நினைவில் கொண்டு, ’தாங்கள் தங்கிய இடம், உபசரிப்பு அருமையாக இருந்தது’ என்று கூறும் போது தமிழனாக பெருமையாக உள்ளது.
அர்ஜூனா விருதிற்கு அடுத்தபடியாக உலக செஸ் சாம்பியன் ஆவதே குறிக்கோள். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அடுத்ததாக இஸ்ரேல் நாட்டிற்குச் சென்று விளையாட உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' முதலமைச்சர்