சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும். இது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். மாணவி பயின்ற பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் நடக்கக் கூடாது. மதமாற்றம் தொடர்பாக மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உதவி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் முன்வைக்கும் மதமாற்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணையின் போது யாரும் சொல்லவில்லை.
இருப்பினும் குற்றச்சாட்டின் அடிப்படையில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவி தற்கொலை - கட்டாய மதமாற்றம் காரணமா?