சென்னை: தமிழ்நாட்டின் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி மற்றும் துறையின் தலைமை பதவி ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்து ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஊழல் புகார்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு விசாரணை செய்ய அனுமதி கொடுக்காமல் பல மாதங்கள் தாமதித்து வருகிறது.
கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த இந்த அரசு இதுவரை ஒருவர் மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் திணறுவதற்கும் பல ஊழல்களில் விசாரணையே துவங்க முடியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தவிப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணம். அறப்போர் இயக்கம் இது சம்பந்தமான புகாரை முதலமைச்சருக்கும், தலைமை செயலருக்கும் அனுப்பியுள்ளோம் என அறப்போர் இயக்கம் புகாரில் தெரிவித்துள்ளது.
2017 இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் அரசாங்கத்திலிருந்து தன்னிச்சையாக செயல்பட வேண்டியவர் என்றும் ஏற்கனவே அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறையின் தலைவராக இருப்பின் அவர் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியவராக இருப்பார் என்றும் அவரால் தன்னிச்சையாக இயங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வேறு எந்தத் துறையிலும் இல்லாத அரசு மற்றும் அரசியல் தலையீடு இல்லாத வகையில் தன்னிச்சையாக ஊழல் கண்காணிப்பகம் மட்டும் பார்க்கக் கூடிய வகையில் உச்சபட்ச நேர்மையான ஒரு நபரை கண்காணிப்பு ஆணையராக நியமிக்க வேண்டும் என்பது உயர் நீதிமன்ற தீர்ப்பு. ஆனால் இந்தத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலராகவும் ஊழல் கண்காணிப்பகத்தின் ஆணையராகவும் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் சொன்னது போல சிவ தாஸ் மீனா ஐஏஎஸ் தன்னிச்சையாக இயங்காமல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் வரும் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி சம்பந்தமான அறப்போரின் ஊழல் புகார் மீது ஐஏஎஸ் மற்றும் பிற அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்காமல் எட்டு மாதத்திற்கும் மேல் தாமதப்படுத்தினார். மத்திய அரசாங்கம் 2018ல் ஊழல் தடுப்பு சட்டத்தில் ஒரு மாற்றம் கொண்டு வந்து இனி எந்த ஒரு புகாரியிலும் பொது ஊழியர்களை விசாரிக்கப்பட வேண்டும் என்றாலும் அந்தத் துறையின் தலைவரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் விசாரணையை தொடங்க முடியும் என்றது.
இதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக உள்ள சிவ தாஸ் மீனா சென்னை கோவை மாநகராட்சி ஊழல்கள் சம்பந்தமாக பொது ஊழியர்களை விசாரிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக செயல்படும் தமக்கே கடிதம் அனுப்பி அனுமதி பெற வேண்டும்.
நகராட்சி நிர்வாக செயலர் சிவ தாஸ் மீனா 8 மாத காலத்திற்கும் மேல் பொதுஊழியர்களை விசாரிக்க அனுமதி தராமல் காலம் தாழ்த்தினார். ஊழல் கண்காணிப்பு செயலரான சிவ தாஸ் மீனா அதன் மேல் கேள்வி கேட்கவில்லை. தன் சக ஐஏஎஸ் அதிகாரிகளை மற்றும் தனக்கு கீழ் வரும் மாநகராட்சி அதிகாரிகளை காப்பாற்ற செய்யும் இந்த தாமதத்தினால் சென்னை கோவை மாநகராட்சி ஊழல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டது.
இன்று வரை அது தாக்கல் செய்யப்படவில்லை. ஜூன் 2022-ல் ஒரு ஆங்கில நாளேட்டில் விசாரணைக்கு அனுமதி கொடுக்காமல் எட்டு மாதத்திற்கு மேல் தாமதிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளிவந்த பிறகே பொது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் சில புகார்களிலும் இந்த தாமதம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. எனவே ஊழல் கண்காணிப்பு ஆணையராக சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது படி நேர்மையாக தன்னிச்சையாக இயங்கக்கூடிய வேறு துறைகள் பார்க்காத ஒருவரை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அறப்போர் புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி கேட்டும் தராமல் தாமதித்து வருகிறார்கள். பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் மீது அறப்போர் இயக்கம் ஜனவரி 2022 ல் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தது. இதை விசாரிக்க அனுமதிக்கோரியும் பத்திரப்பதிவுத்துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி மற்றும் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பொது ஊழியர்கள் மேல் விசாரிக்க அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலில் நடவடிக்கை எடுக்காமல் ஜோதி நிர்மலாசாமி மற்றும் சிவனருள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராயபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சட்டவிரோதமாக மோசடியாக பதிவு செய்த அங்கயர்கன்னியை ஓய்வு பெற அனுமதித்தது நமக்குத் தெரியும். பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலில் அவர்கள் அலுவலர்களை காப்பாற்றும் வேலையை இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் மீதும் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
மேலும் அறப்போரின் பல புகார்களான பேருந்து நிழற்குடை மாநகராட்சி ஊழல், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் லஞ்சம் வாங்கிய புகார், நிலக்கரி போக்குவரத்து ஊழல், KP பார்க் ஊழல் என பல அறப்போர் புகார்கள் மீது விசாரிக்க அனுமதி கோரப்பட்டும் பல மாதங்களாக ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் துறை தலைவர்கள் அனுமதி தர தாமதிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.
எனவே இதன் மீது உடனடி கவனம் செலுத்தி முதல்வர் அவர்கள் தன்னிச்சையாக இயங்கக்கூடிய நேர்மையான ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமிப்பதும், சட்டப்படி மூன்று மாதத்திற்குள் அனுமதி தராமல் தாமதிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது தொடரா வண்ணம் உடனடி நடவடிக்கை கோரியும் அறப்போர் இயக்கம் முதல்வர் மற்றும் தலைமை செயலருக்கு புகார் அனுப்பி உள்ளது.