சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை ஏசிடிசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், இசை நிகழ்ச்சிக்கு சுமார் 20,000 பேருக்கு மட்டும் காவல் துறையினரிடம் அனுமதி பெற்று இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால், ஏசிடிசி நிறுவனம் இசை நிகழ்ச்சிக்காக சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டிக்கெட் விற்பனை செய்திருந்ததால், அந்த இடத்திற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டு, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் முறையான பாதுகாப்பு அம்சங்கள், வாகன நிறுத்துமிடம், இருக்கை வசதிகள் சரிவர இல்லை. இதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர். பல பெண்கள் இந்த கூட்ட நெரிசலில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இந்த நிகழ்ச்சி குளறுபடியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் கான்வாயும் சிக்கியது.
பின்னர் இந்த அசம்பாவிதம் தொடர்பாக இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பங்கேற்க முடியாத ரசிகர்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை சமூக வலைத்தளங்களில் புகாராக தெரிவித்தனர். மேலும், இது போன்ற ஒரு மோசமான நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஆய்வு செய்து, ஏசிடிசி நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் ஹேமந்த் மற்றும் செந்தில்வேலன் ஆகியோரை சோழிங்கநல்லூரில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இது தொடர்பாக கானத்துர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பனையூரில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றதில் ஏற்பட்ட குளறுபடி சம்பந்தமாக ACTC நிறுவனத்தின் மேலாளர் மீது கானத்தூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் 406 தன்னுடைய சுய லாபத்திற்காக மக்களை ஏமாற்றம் செய்தது, 188 அதிகப்படியான மக்களை கூட்டியதற்கும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தது என ACTC நிறுவன இயக்குநர் ஹேமந்த் மற்றும் செந்தில்வேலன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: “நீ சினிமாவில் வில்லன் நான் நிஜத்தில் வில்லன்”- நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொலை மிரட்டல்!