சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பைக் கண்காணிக்கச் சிறப்புச் சுகாதாரத்துறை அதிகாரிகளை நியமனம் செய்து பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பருவ காலங்களில் வரக்கூடிய டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த டெங்குவால் தமிழ்நாட்டில் 4 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் நடப்பாண்டில் டெங்குவால் இறந்துள்ளனர். இந்த நிலையில், காய்ச்சல் அதிகளவில் பரவும்போது அதனை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, சுகாதாரத்துறை அதிகாரிகளை நியமனம் செய்யப்படுகின்றனர்.
டெங்கு பாதிப்பைக் கண்காணிக்கத் தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள 45 சுகாதார மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிக்கும் 4 முதல் 5 மாவட்டங்களைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு அதிகாரிகள் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தினசரி கண்காணிக்க வேண்டும். மாவட்டங்களுக்கு உட்பட்ட சுகாதார மையங்களில் ஆய்வு செய்வதும், மருத்துவ வசதிகள், மருந்து கையிருப்பு மற்றும் மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
கொசு உற்பத்தி குறித்து தனியார் நிறுவனங்கள், கட்டடங்கள், காலி மனைகள் மற்றும் பொது இடங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த ஒருங்கிணைப்பாளராக இருந்து செய்ய வேண்டும்.
எப்பொழுதும் 50 விழுக்காடு மருத்துவர்கள் கட்டாயம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும். 2 அல்லது 3 தினங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களும் நடத்த வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடிவடிக்கை! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உயர்மட்ட ஆலோசனை!