சென்னை: அனைத்து அரசு நிதி உதவி, பகுதி நிதியுதவி, சுயநிதிப் பள்ளிகளில் தொடக்க, ஆரம்ப, தொடர் அங்கீகாரம், பிற வாரியப் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ்கள் ஆகியவை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "அனைத்து அரசு நிதி உதவி, பகுதி நிதி உதவி, சுயநிதிப் பள்ளிகளில் தொடக்க, ஆரம்ப,தொடர் அங்கீகாரம் வழங்கவும், பிற வாரியப் பள்ளிகளான (சிபிஎஸ்இ, சிஏஐஇ, ஐபி மற்றும் பிற) சார்பான தடையின்மைச் சான்று, அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை எளிமையாக்கி இணைய வழியே ஒளிவு மறைவின்றிப் பெறத்தக்க வகையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை மூலம் மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆன்லைன் மூலம் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அலுவலர்களும் ஆன்லைன் விண்ணப்பங்களை அனுமதிப்பது, நிராகரிப்பது குறித்தும் கட்டாயம் விதிமுறைகளின் படி பின்பற்றப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் ஒற்றை சாளர முறையில் ஆய்வு செய்யப்பட்டு, பல துறையின் அலுவலர்களும் சரிபார்த்து அனுமதி வழங்கப்படும். மேலும் இதற்காக தொடர்புடைய அலுவலர்கள் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தினை பார்க்கவும் அனுமதி அளிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆழ்கடல் ஆய்வுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் தங்கம் தென்னரசு