சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகில் தின்பண்டங்கள் விற்பனை செய்வது, காலி மதுபான பாட்டில்களை சேகரிப்பது தொடர்பான பார் உரிமங்களுக்கு டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் இன்று (ஜூன் 12) மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனுவில், 'தனி நீதிபதியின் உத்தரவால் தமிழகம் முழுவதும் 560 பார்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும்' என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தலைமை நீதிபதி கங்கபூர்வாலா அமர்வில் முறையீடு செய்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் செய்த மேல் முறையீட்டை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, ஜூன் 19ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனை செய்யும் கடைகள், பார்கள் மீது நடவடிக்கை கோரி மனு!