சென்னை: பசுமை வழி சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் "இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்" விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு, மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, அப்பாவு கூறுகையில், இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றால் இந்த சமூகம் முன்னேற்றம் அடைந்து இருக்குமா என்பதை நாம் ஒரு முறை, லட்சம் முறை, கோடி முறை சிந்தித்து பார்க்க வேண்டும். ஜனநாயகம் என்ற ஒன்று இல்லை என்றால் நாம் முன்னேறியிருக்க முடியாது.
இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தின் போது சட்டத்தின் அடிப்படையை மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரையே 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை என்று சட்டம் தான் தீர்ப்பளித்தது. இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்று சட்டத்தில் தொகுதி 17இல் ஒரு பக்கத்தில் உள்ளது. அதை நாம் தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
அந்த பக்கத்தை கிழித்து எடுத்து எரித்தார் பேராசிரியர் அன்பழகன். அதற்காக பிரிவு 188 பேரவை விதி 4.1 கீழ் அவரது பதவி பறிக்கப்பட்டது. விதி 150இன் படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதன்படி நடப்பேன், அதை மீற மாட்டேன் என்று ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியா மத சார்பற்ற நாடு, இந்தியா இறையாண்மை உடைய நாடு, இந்தியா ஜனநாயக குடியரசு நாடு. இதில் எதேனும் ஒன்றை பொது வெளியில் பேசினால் அதில் தவறில்லை.
ஆனால் ஆளுநர் ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பொது வெளியில் மதசார்பற்ற இந்தியாவை மத சார்புடைய நாடு என்று பேசி இருக்கிறார். அது தவறு ஆளுநர் அதை சொல்லியிருக்க கூடாது, தவிர்த்திருக்க வேண்டும். மாநில மனித உரிமைகள் ஆணையத்தை உருவாக்கியது கருணாநிதி, வீட்டில் வேலை செய்கிற பெண்களுக்கு வாரியம் ஒன்றை 2007ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமைத்தார். தொழிலாளர்களிடையே அந்த வாரியம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
ஆகையால் 81 ஆயிரம் பேர் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அது வருத்தபட வேண்டிய ஒன்று. இந்த வாரியத்தில் தொழிலாளர்களுக்கு நிறைய பயன் இருக்கிறது. வீட்டு வேலை பணியாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். எங்காவது ஒன்று இரண்டு தவறுகள் நடந்தாலும் வீட்டின் ஏழ்மை நிலை காரணமாக சமாளித்து தங்களுக்கு நடப்பதை மறைத்து செல்கிறார்கள்.
மகளிர் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் மகளிருக்கென தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இது சட்டமாக நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முற்றுகை: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு