சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து 'தமிழ்நாடு தர்ஷன்' என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணமாக வந்த 18 மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார். அப்போது, பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்நாட்டில் தாங்கள் கண்டு களித்த பாரம்பரிய கோயில்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றை குறித்து பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு 3,500 ஆண்டுகள் பழமையான வரலாறும் உண்டு. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் பிற மாநிலங்களில் குடி பெயர்ந்து உள்ளனர். பண்டைய காலங்களிலேயே அரசர்களும் வேறு நாடுகளுக்கு சென்று வாழ்ந்துள்ளனர்.
இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியும் திணிக்க முடியாது. பிற மொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தமிழ் மொழியினை மிகவும் ஆழமாக படிக்க வேண்டும். தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ்நாடு தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும். 2047ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும் உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும். திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை அனைவரும் ஆழமாக பயில வேண்டும். திருக்குறளை போல் பல இலக்கியங்கள் தமிழில் உள்ளது" என்று கூறினார்.
முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தனர். மாணவர்களுக்கு நினைவு பரிசாக வள்ளுவர் கோட்டம் மாதிரி சிற்பமும், இந்தி மற்றும் நேபாளி மொழியில் உள்ள திருக்குறள் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: "திமுக கோப்புகள்" - அண்ணாமலை அதிரடி ட்வீட்.. வாட்ச் பில் இடம்பெறுமா..?