தமிழ்நாட்டில் பண்டிகை நாள்களின்போது அரசு அலுவலகங்களில் பரிசுத் தொகை, பரிசுப் பொருள்கள் கையூட்டாக வழங்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும்வகையில் ஒவ்வொரு பண்டிகை நாளுக்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர், அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம்.
இதன் அடிப்படையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அலுவலர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் கையூட்டாக வழங்கப்படுவதாகத் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு, மின்சார வாரியம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் மின்சார வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். ஏழுகிணறு, சிந்தாதிரிப்பேட்டை, எஸ்பிளேனேடு ஆகிய மின்சார வாரிய அலுவலங்களில் மூன்று குழுக்களாகச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத 1.29 லட்ச ரூபாயைப் பறிமுதல்செய்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் மின்சார வாரிய அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களில் மட்டும் பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றது தெரியவந்தது.
மேலும் 86.50 லட்ச ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி கணக்கில் வராத 1.50 லட்ச ரூபாய் காசோலையும் பறிமுதல்செய்யப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் நடத்திய சோதனையில் இதுவரை ஐந்து கோடி ரூபாய் அளவிற்குப் பணம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.