அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன், மன உளைச்சல் காரணமாக இன்று (செப்.09) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"நீட் பலிபீடத்தில் மேலும் ஒரு உயிரை இழந்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு தயாரான அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கிடைத்துள்ள தகவல் மனவேதனையை ஏற்படுத்துகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? இந்த நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள், எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக எதிர்கொள்ளுங்கள். தற்கொலை எண்ணத்தை விடுங்கள்!"
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.