சென்னை: திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்தாண்டு ஜூன் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் எனக்குச் சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 8.5 கிரவுண்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தில் மாத வாடகையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனும், எனது தம்பியுமான நவீன் குமார் Ashwan Fishnet என்ற பெயரில் தொழிற்சாலையைத் தொடங்கினார்.
நிலத்தை அபகரிக்க முயற்சி
2016ஆம் ஆண்டு மீன்வளத் துறை அமைச்சராக ஜெயக்குமார் ஆன பின்பு கும்மிடிப்பூண்டியில் JFN Fishnet Manufactures என்ற பெயரில் தொழிற்சாலை தொடங்க முடிவு செய்ததால், நவீன் குமாரைத் தூண்டிவிட்டு எனது நிலத்தை அபகரிக்க முயன்றார். மேலும் முக்கிய இடங்களில் உள்ள நிலத்தை கொடுத்துவிடவும் அவர் மிரட்டினார்.
2020ஆம் ஆண்டு துரைப்பாக்கத்தில் உள்ள எனது தொழிற்சாலையைப் பார்க்கச் சென்றபோது நவீன்குமார், அவரது மனைவி ஜெயப்பிரியா ஆகியோர் மிரட்டினர். துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் காணொலி ஆதாரத்துடன் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடவடிக்கை எடுக்க மனு
எனவே ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார், ஜெயப்பிரியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஜெயக்குமார், நவீன்குமார், மனைவி ஜெயப்பிரியா மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூன்றாவது வழக்கில் கைது
இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை மூன்றாவது வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். வருகிற திங்கள்கிழமை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜெயக்குமாரை முன்னிறுத்த இருப்பதாகக் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊருக்கு நீ உழைத்தால் வெற்றி நிச்சயம்!