சென்னை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் 93 ஆயிரம் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கி வைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்தத் திட்டத்திற்கு ஏற்கெனவே படிப்பை முடித்தவர்களும், தனியார் பள்ளியில் படித்த மாணவிகளும், முதுகலைப்பட்டப்படிப்பில் படிக்கும் மாணவிகளும் என சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான இளநிலைப்பட்டப்படிப்பினை படிக்கும் 93 ஆயிரம் மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் நடப்புக்கல்வியாண்டில் இளநிலைப்படிப்பில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், புதிய பதிவுக்கான சேவை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு புதிய பதிவுக்கான https://penkalvi.tn.gov.in/ தளம் விரைவில் திறக்கப்படும் எனவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவித்துள்ளது.
உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதித்திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:நைஜீரிய செஸ் வீராங்கனையை உற்சாகத்துடன் வழி அனுப்பிய தமிழ்நாடு போலீசார்