சென்னை: சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 60 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதிய பிரிவுகள் உருவாக்குதல்
சவாலான மற்றும் முக்கிய இணையவழிக் குற்றங்களில் புலனாய்வு செய்யவும் காவலர்களுக்கு சைபர் குற்ற புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கவும் (இதற்கு மாநில இணையதள குற்றப் புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும்)
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கும் புலனாய்வு மேற்கொள்வதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளைத் தடுக்க சென்னை காவல் துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும். அந்த குழு தலைமை கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும் கடலோர குழுமம் மற்றும் தீயணைப்புத் துறை மீட்பு வீரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
சென்னையில் தீவிர குற்றவாளிகளில் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் குற்ற விகிதத்தை குறைப்பதற்கு மொத்தம் 8 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் சென்னை தெற்கு மற்றும் வடக்கு பிரிவுகளில் தலா ஒரு தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.
சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய சிறுவர் மற்றும் சிறுமியர் தவறான வழியிலும் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாமல் இருக்க 38.25 லட்சம் ரூபாய் செலவில் 51 சிறார் மன்றங்கள் உருவாக்கப்படும். காவல் துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சென்னையிலுள்ள 100 பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். சென்னை பெருநகர காவலில் கூட்டமான இடங்களையும் நீண்ட தூர சாலைகளையும் கண்காணிக்க 3 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்தப்படும்.
வரவேற்பாளர்
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படையில் ஒப்பந்த அடிப்படையில் சேரும் விதமாக அவர்களுக்கு கடலோர காவல்படை குடும்பம் மூலம் 90 லட்சம் ரூபாய் செலவில் ஆறு மாத பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியின் மூலம் இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு பணியில் சேரவும் வாய்ப்பு அதிகரிக்கும்.
கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய ஆயிரம் மீனவ இளைஞர்கள் ஊர்காவல் படையினராக பணியமர்த்தப்படுவர். இதற்கான மொத்த செலவு 3 கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும். காவலர் பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும் காவல் துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களையும் புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும்.
சென்னை மாநகரில் மண்டல அளவில் நான்கு சைபர் குற்ற காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கென மறுவிநியோக முறையில் தேவையான பணியாளர்கள் பயன்படுத்தப்படுவர். பொதுமக்கள் காவல் உயர் அலுவலர்களை இணையதள காணொளி மூலம் சந்தித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இதனால் உயர் அலுவலர்களை பார்க்க பயணம் மேற்கொள்ளவும் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பொது மக்களின் பிரச்னைகளை காவல் நிலைய அலுவலர்களிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும். காவல் நிலைய அலுவலர் விசாரணை அறிக்கை அந்த செயலில் தரவேற்றம் செய்யப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்களின் குறைகளை களைய காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்படும். இணையத்தின் மூலம் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்யவும், அவர்களுக்கு விசாரணை முடிவுகளை தெரிவிப்பதும் இப்பிரிவின் வேலையாக இருக்கும்.
சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பும் வழிகாட்டுதலும் வழங்க சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும். சுற்றுலா காவல் துறையினருக்கு தனி பயிற்சி வழங்கப்படும். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டு வழிசாலை திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் பத்திரிகைகள் மீது முந்தைய அரசால் 5,570 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை திரும்பப்பெற இந்த அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதேபோல் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பணியாளர் நலன்
காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். நிலுவையில் உள்ள சிறு தண்டனைகள் கைவிடப்படும். இதனால் சிறு தண்டனைகள் பெற்ற காவலர்கள் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் பெறுவர்.
காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம் இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும். காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி காத்திட ஏதுவாகவும் தனது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்.
காவலர்களுக்கு ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப் படுவது போல இனி அவர்களின் வாழ்க்கை துணைவியாருக்கும் அளிக்கப்படும். பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனையும் இதில் சேர்க்கப்படும். காவல் ஆளிநர்கள் தற்செயல் விடுப்பு ஒப்புதல் அளிக்கும் மென்பொருள் 10 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணும் பொருட்டு காவல் நிலையங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ள 38 மாவட்டங்கள் மற்றும் 7 மாநகரங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்க தலா இரண்டு லட்சம் வீதம் 90 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காவலர்களின் குறை தீர்ப்பதற்காக மாவட்ட அளவிலும் சமூக அளவிலும் மன அளவிலும் ஒரு புதிய நடைமுறை உருவாக்கப்படும். இதற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு தனி செயலி அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலமாக காவலர்கள் தங்கள் மக்களை எளிதில் சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்படும்.
சென்னையை தலைமை இடமாக கொண்டு பணியாற்றும் மாநில நுண்ணறிவு பிரிவு, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு, கடலோர காவல் படை, ரயில்வே காவல் படை மற்றும் காவல் பயிற்சிப் பள்ளியில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் துறையில் வழங்கப்படுவது போல் உணவு மாதம் தோறும் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம் 14 கோடி ரூபாய் ஆகும்.
காவலர் தலைமை காவலர் உதவி ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தற்போது வழங்கப்படும் வீடுகளின் அளவைவிட விகிதாச்சாரப்படி உயர்த்தி வழங்கப்படும்.
புதிதாக அமைக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் காவலர் அங்காடிகள் நிறுவப்படும். காவல்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் ஏற்படுத்தப்படும். காவல் நிலையங்களில் உடனடி மற்றும் அவசர செலவுகளை சமாளிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பறக்க சில்லறை செலவின நிதி உயர்த்தப்படும்.
வாகனங்கள்
நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை பலப்படுத்தும் விதமாக 9 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் பழுதடைந்துள்ள 62 ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிய 62 வாகனங்கள் வாங்கப்படும். காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடுமுறையை எளிமையாக்கி சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம் விடும் அதிகாரம் வழங்கப்படும். இதனால் அரசுக்கு வருமானம் வரும் நிலை ஏற்படும்.
சுமார் பத்து வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களுக்கு பதிலாக 9 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் 57 ரோந்து வாகனங்களும் 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களும் வாங்கப்படும்.
கட்டடங்கள்
ஆயிரம் விளக்கு பகுதியில் mansion site என்ற இடத்தில் 225 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் 886 காவலர் தலைமை காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். அலுவல் நிமித்தமாக சென்னை வரும் காவலர்கள் தங்குவதற்கு ஏதுவாக கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் 16 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 450 காவலர்கள் தங்குமிடம் கட்டப்படும்.
காவலர், தலைமை காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வீடு கட்டித்தரும் திட்டம் திருவாரூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். கோவை காந்திபுரத்தில் 1.4 ஏக்கர் இடத்தில் 140 காவல்துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகள் 54 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
புதிய முயற்சிகள்
வங்கி, வேலை மோசடி, பதிவுறு மோசடி மற்றும் இணைய குற்றங்கள் ஆகியவற்றை புலன்விசாரணை செய்ய 1 கோடி ரூபாய் செலவில் நிபுணர்களின் ( HIRING EXPERTS ) சேவை பயன்படுத்தப்படும். பெருநகர போக்குவரத்து காவல் போக்குவரத்தை சீர் செய்ய தடுப்பு அரண்களை பயன்படுத்தி வருகின்றது. தடுப்பு அரண்களை இந்திய சாலை குடும்பத்தின் வரை முறைப்படி பழுது பார்க்கவும் மாற்றியமைக்கவும் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
தமிழ்நாட்டில் 249 காவலுக்கு கூட்டங்கள் உள்ளன. 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அரசு அனைத்து இடங்களிலும் ஓர் அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கும்.
புதிய பதவி உருவாக்குதல்
சென்னை பெருநகர காவலில் உள்ள சிசிடிவி வலைப்பின்னல் மாநிலத்திலேயே மிகப்பெரியதாகும். இதனை சிறப்பாக மேற்பார்வையிட துணை காவல் ஆணையாளர் (தொழில்நுட்பம்) என்ற பதவி 72.59 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் வல்லுநர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை புதிய அறிவிப்புகள்
அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் தீயில் இருந்து பாதுகாக்கும் தற்காப்பு உடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் 1,350 தற்காப்பு உடைகள் வழங்கப்படும். தீயணைப்பு பணியாளர்கள் மீட்பு பணியின் போது தனித்த அடையாளத்துடன் விளங்கவும் சிறப்பாக செயல்பட ஏதுவாக பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மீட்பு உடைகள் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் 3,000 எண்ணிக்கையில் வாங்கி வழங்கப்படும்.
தீயணைப்பு பணியின் போது புகை மற்றும் நச்சு வாயுக்களில் இருந்து தீயணைப்பு பணியாளர்களை பாதுகாக்கும் விதமாக 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 350 எண்ணிக்கையில் மூச்சு கருவிகள் வழங்கப்படும். மீட்புப் பணித் துறை பணியாளர்களின் பயிற்சி வசதிகளை நவீன படுத்தும் நோக்கில் செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் அமைய உள்ள மாநில பயிற்சிக் கழகத்தில் 2 கோடி ரூபாய் செலவில் நிகழ்நேர மாதிரி பயிற்சிக்கூடம் நிறுவப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு முடிந்து கண்டனம் செய்யப்பட்ட நீர்த்தாங்கி ஊர்திகளுக்கு பதிலீடாக முதற்கட்டமாக 25 புதிய நீர்த்தாங்கி ஊர்திகள் 18 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். மீட்பு பணிகளை செவ்வனே மேற்கொள்ள புதிய ஊர்திகள் 65 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். கட்டட இடிபாடுகள், சாலை விபத்துகள், புயல் வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது மீட்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள ஏதுவாக 9 கோடி ரூபாய் செலவில் 10 சிறிய அவசரகால மீட்பு ஊர்திகள் வாங்கி வழங்கப்படும்.
பெரும் தீ விபத்துகளின் போது ஏற்படும் அதிக அளவிலான தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு 16 கோடி ரூபாய் செலவில் 20 பெரும் தண்ணீர் லாரிகள் வழங்கப்படும். வளர்ந்து வரும் நகரமயமாக்கலின் தீயணைப்பு சேவையினை கருத்தில் கொண்டு 11 கோடி ரூபாய் செலவில் 42 மீட்டர் உயரம் செல்லக்கூடிய வான் நோக்கி நகரும் ஏணியுடன் கூடிய தீயணைப்பு மீட்பு ஊர்தி ஒன்று திருப்பூர் மாநகரத்திற்க்கு பிரத்தியேகமாக வழங்கப்படும். மலைப்பாங்கான பகுதிகளில் தீயணைப்பு சேவையை செவ்வனே செய்ய ஏதுவாக 7 அதி உயர் அழுத்த நீர் தேங்கி வண்டி 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்