சென்னை: ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாணவர் மன்ற தொடக்க விழா, மருத்துவ மாணவர்களின் உடல் திறன் மேம்பாடு மற்றும் மனநல புத்தாக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன், மேயர் பிரியா, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்ரமணியன், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம் 18,000 ரூபாய் உதவி தொகையாக வழங்க கூடிய திட்டம்; இதை கர்ப்பிணிகள் முழுமையாக தங்களுக்கு பயன்படுத்தி கொள்ள மாட்டார்கள் என கருதி பொருட்களாக வாங்கி தரலாம் என அரசு இந்த திட்டத்தை 2018 ஆம் ஆண்டு தொடங்கியது என்றார்.
அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி தொடர்ந்து, ஆவின் ஹெல்த் மிக்ஸ் தாய்மார்கள் உடல் மேம்பாட்டிற்காக பயன்படுத்துகிறீர்களா என்பது இன்னொரு கேள்வி; ஆனால் அது குழந்தைகளுக்கு தரலாம். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை படி அது கொடுக்கப்பட்டு வருகிறது. ஹெல்த் மிக்ஸ் பவுடரை பொறுத்த வரை, டெண்டரில் கொள்முதல் விலை 460.50 ரூபாய் ; ஆனால் சந்தை விலை 588 ரூபாய் , எனவே இதில் வித்தியாசம் 127.50 ரூபாயாக உள்ளது என அமைச்சர் கூறினார்.சந்தை விலையை விட கொள்முதல் விலை குறைவு: மேலும் அயர்ன் சிரப் பொறுத்தவரை, சந்தை விலை 112 ரூபாய் ஆனால் டெண்டர் கொள்முதல் விலை 74.60 ரூபாய், இதில் வித்தியாசம் 37.35 ரூபாயாக உள்ளது. இதை விட்டுவிட்டு ஆவின் நிறுவனத்தில் வாங்குவது என்பது சரியானது அல்ல அது தவறான ஒன்று என குறிப்பிட்ட அமைச்சர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் துறை ரீதியாக தெளிவான பதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் 32 பொருள்கள் அடங்கிய ஹெல்த் மிக்ஸை வெறும் புரோடின் என்று மட்டுமே கூற முடியாது, கர்ப்பிணிகளுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைபடியே ஊட்ட சத்து பொருள்கள் தர முடியும் என்றார்.
ஒப்பீடு தவறு: அடுத்ததாக பேசிய நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிட கூடாது என்பது பழமொழி, இங்கு ஆப்பிளை எலுமிச்சை பழத்துடன் ஒப்பிட்டது தவறு; அயர்ன் என்பது குழந்தைகளுக்கு கொடுக்க கூடியது.
ஆனால் ஹெல்த் மிக்ஸ் என்பது 32 பொருள்களை உள்ளடக்கியது அதை தான் தாய்மார்களுக்கு கொடுக்க முடியும் என்றும் ஆவின் பொருள்களை குழந்தைகளுக்கு தான் கொடுக்க முடியும் என்றும் பேசினார்.
இறுதியாக பேசிய மருத்துவப் பணிகள் கழகம் இயக்குனர் தீபக் ஜேகப், அரசின் அடிப்படை விதிகளின்படியே டெண்டர் விடப்பட்டு உள்ளது என்றார்.