சென்னை: அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அண்ட் மோடி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் விவாதப்பொருளாக மாறியுள்ளன. இதற்குப் பல்வேறு தரப்பினரிடையே ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜே.பி.நட்டா, ஹெச்.ராஜா, நடிகை குஷ்பூ போன்றவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். திமுகவினர், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர். மேலும் டிடிவி தினகரன் அவரது தனிப்பட்ட கருத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை என கூறினார். இது ஒரு புறம் இருக்க இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கருப்பு நிற உடையில் கடற்கரையில் நின்றபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் "நான் கருப்பு திராவிடன்" எனப் பதிவு செய்தார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான். நானும் கருப்பு திராவிடன் தான்.
கருப்பு என்றால் நான் அண்டங்காக்கை கருப்பு. இவர்கள் அனைவரையும் விட தமிழ் உணர்வு அதிகம் கொண்டவன் நான். எனக்கு சத்தியமாக இந்தி தெரியாது" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “யுவன் கடற்கரையில் நின்ற படி ஏதோ புகைப்படம் எடுத்துப் போட்டுள்ளார். இந்த விஷயத்தை இத்தோடு விடுங்கள். இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தேவைப்பட்டால் இதுகுறித்து பாஜக தலைமைக்கு கடிதம் எழுதவும் தமிழ்நாடு பாஜக தயாராக உள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கருப்பு திராவிடன் - யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி பதிவு