கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், நான்கு மாத காலமாக தனியார் பொறியியல் கல்லூரிகள் ஊதியம் வழங்காமல் உள்ளன. இதனால் ஆராய்சி படிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் கல்லூரி பேராசிரியர்கள், பருவக் கட்டணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஜூலை மாதத்திற்கான பருவக் கட்டணத்தை அபராதமின்றி இன்றைக்குள் (ஆகஸ்ட் 19) செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வரும் 26ஆம் தேதியும், இறுதி வாய்ப்பாக செப்டம்பர் 2ஆம் தேதி மூன்றாயிரத்து 500 ரூபாய் அபராத தொகையுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு பருவக் கட்டணத்தை குறிப்பிட்ட தேதிகளில் செலுத்த தவறினால் முனைவர் படிப்பிற்கு பதிவு செய்துள்ள நபர்களின் பதிவு நீக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் கடந்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக முனைவர் பட்டம் பயின்று வரும் தாங்கள் படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவர். தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் தரப்பினர், கரோனா பாதிப்பால் கடந்த நான்கு மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் பத்தாயிரம் முதல் 15ஆயிரம் ரூபாய் வரை பருவக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, தற்போது பருவக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.