சென்னை: சட்டவிரோதமாக கல்லூரிக்கே வராமல் 60% நேரடியாகவும், 40% ஆன்லைனிலும் எம்.இ படித்தால், டிகிரி வழங்க முடியாது எனவும், தரமில்லாத பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பால்ராஜ் எச்சரித்துள்ளார்.
அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் Manufacturing Course Work Integrating அறிமுகம் செய்து உள்ளோம். முதுகலைப் பொறியியல் படிப்பில் எம்.இ படிக்க விரும்புபவர்கள் முழு நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, பணி செய்து கொண்டு உள்ளவர்களுக்கு ஏற்றது போல் time table கொடுத்து பணியாளர்கள் படிக்கவும் ஊக்குவிக்கிறது.
எம்.இ டிகிரி மாணவர்கள் தொலைதூர கல்வி போல, படிக்கக்கூடாது. மாணவர்கள் வராமல் இருந்தாலும் வருகை பதிவேடு தருகின்றனர் என்று ஏதோ ஒரு கல்லூரியில் படிக்க வேண்டாம். அது எப்போது இருந்தாலும், உங்களுக்கு பிரச்சனைதான். இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரியில் Manufacturing Course Work Integrating துவங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. டிப்ளமோ படித்து முடித்து வேலையில் இருப்பவர்கள் சேர்ந்து படிக்கலாம். அதில், தமிழ்நாட்டில் 23 கல்லூரிகளில் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டள்ளதாக தெரிகிறது. இந்தப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.
மேலும், ஒரு சில கல்லூரிகளில் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வரத் தேவையில்லை எனவும், ஆன்லைன் வகுப்பில் படித்தால் போதும் என கூறப்படுவதாக தெரிகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் விதிமுறைகளின் படி, 60 சதவீதம் நேரடி வகுப்புகள், 40 சதவீதம் ஆன்லைன் வகுப்புகள் என்று தான் உள்ளது. இந்தப் பாடப்பிரிவில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்க வேண்டும். அதுவரை மாணவர்களை சேர்த்தால் அவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது. மேலும், பி.இ படிப்பில் ஒற்றை இலக்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் எம்.இ படிப்பில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
முதுகலை பொறியியல் படிப்பான எம்.இ படிக்கும் மாணவர்கள் சட்டவிரோதமாக சில தரம் குறைவான கல்லூரிகளில் சேர்ந்து கல்லூரிக்கு வராமல் பட்டங்களை பெறுகின்றனர். அவ்வாறு பெறப்படும் பட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்தப் பட்டங்கள் செல்லாது மற்றும் அவர்கள் படித்த கல்லூரியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். இது மாதிரியான நிகழ்வுகள் கோயம்புத்தூர் தொடங்கி கேரள எல்லை பகுதிகளில் அதிகமாக நடைபெறுகிறது.
கேரளாவில் இருக்கும் மாணவர்கள் அவர்கள் மாநிலத்தில் பணிபுரிகின்றனர். ஆனால், தமிழக பகுதிகளில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் அவர்களுக்கு அட்மிஷன் இருக்கிறது. அவர்கள் இந்த கல்லூரியில் படிப்பதுபோல, போலியான அட்டனன்ஸ் வழங்கப்படுகிறது மேலும் செமஸ்டர்கள் முடிந்தவுடன் பட்டமும் வழங்கப்படுகிறது. இது எம் இ படிக்க மிக எளிமையான வழிமுறையாக இருந்தாலும், இது சட்ட விரோதமானது. எனவே, இப்படிப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம். ஆனால், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உயர்கல்விக்கான சேர்க்கை கடைசி நாளாக இம்மாத இறுதி நாள் இருப்பதால் அரசு உடனடியாக இந்த கல்வி முறைக்கு அங்கீகாரம் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு வழி செய்ய வேண்டும்.
பொறியியல் படிப்பினை தனியார் கல்லூரிகளுக்கு 1984 இல் தான் கொடுக்க ஆரம்பித்தோம். 2001 இல் 71 கல்லூரிகளை தொடங்கினோம். ஆனால் தற்பொழுது பொறியியல் படிப்பின் மீது ஆர்வம் குறைத்து தரமற்ற பொறியியல் கல்லூரிகளை மூடும் நிலைக்கு சென்றுக் காெண்டிருக்கிறது. அவர்களாகவே மூடுவார்கள் அல்லது பொது மக்கள் இணைந்து மூட வைப்பார்கள். தரமற்ற கல்லூரியில் படிக்கக்கூடாது என சமூகத்தில் உள்ளவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் B.Voc மாணவர் சேர்க்கை.. வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் படிப்பு!