சென்னை: தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கருணாநிதி மற்றும் சுவாமிநாதன் தேவதாஸ் ஆகியோர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று(பிப்.02) ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிட நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் சமூக நீதி முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? எனவும், 69 சதவீதம் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சமூக நீதி கண்காணிப்பு குழுவின் ஆய்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ரவிக்குமார் கூறும்போது, 'அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் 69 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. எங்களுடைய தேர்வுக்குழுவில் ஒரு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இதே போன்று பி.சி மற்றும் எம்.பி.சி.யை சேர்ந்த பிரதிநிதிகளும் தேர்வுக் குழுவில் இடம் பெற வேண்டும் என கூறியுள்ளனர். அந்த முறை இனி கடைப்பிடிக்கப்படும். இந்த குழுவின் ஆய்வை நாங்கள் ஆக்கப்பூர்வமானதாக பார்க்கிறோம். தமிழ்நாடு அரசின் கொள்கைகளை முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறோம்' என்றார்.
சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் சுவாமிநாதன் தேவதாஸ் கூறும்போது: 'இந்த குழுவின் முக்கிய நோக்கமே பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்பது எந்த அளவில் சரியாக செயல்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதுதான். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 69 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த ஏதேனும் சிக்கல்கள் பல்கலைக்கழகங்களில் இருக்கின்றனவா? என்பதை பார்வையிட்டோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இதனுடைய அறிக்கை என்பது அரசுக்கு அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் வழங்கப்படும். நாங்கள் வழங்கக்கூடிய பரிந்துரை உள்ளிட்டவைகளை முழுமையாக பல்கலைக்கழகம் செயல்படுத்தும் என நம்புகிறோம்.
2008க்கு பின்பாக, பணியிடங்கள் நியமனம், மாணவர்கள் சேர்க்கை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்கிறோம், உடனடியாக தீர்வு காண வேண்டிய விஷயங்களை பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்துகிறோம். அவர்களும் செய்கின்றனர். அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை என்பது நீண்ட கால தீர்வாக இருக்கும். சென்னை பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த போது மாணவர்களின் கோரிக்கையை தெரிவித்தனர். அதனை துணைவேந்தரும் உடனே செய்து தந்துள்ளார்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாசா பெயரில் ரைஸ் புல்லிங் மோசடி.. ரூ.6 கோடி சுருட்டி தப்பிய பலே கில்லாடி!