சென்னை அண்ணாப் பல்கலைக் கழகத்தின் துறைக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வினை அண்ணாப்பல்கலைக் கழகத்தின் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் நடத்தி வருகிறது.
கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் உதவித் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக சீனிவாசுலு 2016 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். மேலும் துணைத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களாக புகழேந்தி சுகுமாறன், செல்வமணி, குலோத்தங்கன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இவர்களின் பதவிகள் முடிவடைந்து பின்னர் தேர்வு முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் விடைத்தாள் திருத்தும்போது பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு மறுமதிப்பீட்டின்போது மதிப்பெண்களை மாற்றி வழங்கியதோடு விடைத்தாளில் திருத்திய பேராசிரியர்களிடம் கூடுதலாக போடும்படியும் கூறியதும் தெரியவந்தது.
இந்த குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றி உதவித் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாசுலு, துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் புகழேந்தி சுகுமாறன், செல்வமணி, குலோத்தங்கன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து துணை வேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார்.