சென்னை: பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஜாதி அரசியல் நடத்தும் தலைவர்களின் வாக்குவங்கிகளுக்கு மட்டுமே, இது எதிராக இருக்கக்கூடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அரசுப் பணி நியமனங்களிலும், மாணவர் சேர்க்கையிலும் பொதுப்பட்டியலில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 30 மாதங்கள் ஆகிவிட்டன.
இந்த சட்டம், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு தற்போது வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் கீழ் வராதவர்கள் மட்டும் இடம் பெறும் வகையில் உள்ளது. அத்துடன் ஒன்றிய அரசு இதற்கான சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. அதேசமயம் மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ற வகையில் இந்த இட ஒதுக்கீட்டின் தகுதியை வகுத்துக் கொள்ளலாம்.
பொருளாதார இட ஒதுக்கீடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்கள் அமல்படுத்திவிட்டன. சமூகநீதி செயல்படுத்துவதில் எப்போதுமே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கும். ஆனால் தற்போது முன்னேற்றப் பாதையில் செல்லும் தமிழ்நாடு, இதுகுறித்து முடிவு செய்யாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.
வாய்ப்புகள் மறுப்பு
சமூக ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகிய இரண்டுக்கும் தீர்வு காண்பதுதான் சமூகநீதி. சமூக நீதியைச் செயல்படுத்தும்போது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எந்த வகையிலும் விடுபடக்கூடாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உரிய வாய்ப்புகளை அளிக்காமல் மறுப்பதால்தான் வறுமை ஏற்படுகிறது.
இந்தியாவில் 68 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் ஏழைகள். 26 விழுக்காடு பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பரம ஏழைகள். இதனைச் சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் புள்ளி விவரமும் இப்படிதான் உள்ளது. தமிழ்நாடு மக்கள் தொகையில் 21 விழுக்காடு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த வகையிலும் இட ஒதுக்கீடு பலன்களைப் பெறுவதில்லை.
இட ஒதுக்கீடு வழங்குங்கள்
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய இடங்களைப் பெற்றுத்தருவது என்பது அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கு நிகராகும். இவ்வாறு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் இதர வகையிலான ஒரு ஒதுக்கீடு பலன்களைப் பெறுவோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சமூக நீதிக்காகப் பாடுபட்ட அண்ணா, கருணாநிதி வழியில் நடை போடும் தற்போதைய தமிழ்நாடு அரசு, நிச்சயமாகப் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடைமுறையைப் பரிசீலித்து உறுதியான, தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TOKYO OLYMPICS: ஒலிம்பிக்கில் மீண்டும் உயிர்பெற்ற ஜன கன மன...