சென்னை: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வரதராஜர் பெருமாள் கோயிலில் இருந்து வரதராஜ பெருமாள் சிலை, ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட உலோக சிலைகள் கடந்த 2012ஆம் ஆண்டு திருடப்பட்டதாக செந்துறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எனப் பதிவு செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இந்த வழக்கை 2020ஆம் ஆண்டு கையில் எடுத்து விசாரிக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியங்கள் ஆகியவற்றில் உள்ள சிலையை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலை உடன் ஒத்துப் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த சிலையானது, ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க குடிமகனுக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அந்த நபர் சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து அந்த சிலை இந்தியா வர வைக்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு திருடு போன ஆஞ்சநேயர் சிலையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிலையை மீட்டெடுத்த தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மாநகராட்சிப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித் துறையில் இணைத்திடுக" - ஆசிரியர்கள் கோரிக்கை!